யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்.!! ஆனாலும் விடுதலையாக முடியாத நிலை.!

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்.!! ஆனாலும் விடுதலையாக முடியாத நிலை.!



marithas case cancelled

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாரிதாஸ் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்படுகிறார். நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த தனது கருத்துக்களை புள்ளிவிவரத்துடன் யூடியூப் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக இவர் பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எதிராகவும் சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இவர் எந்த ஒரு வீடியோ போட்டாலும் அது ஒரே நாளில் வைரலாகிவிடும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் குன்னூருக்கு சென்ற இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ, விமான படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மாரிதாஸ் வெளியிட்டதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து மதுரை போலீஸார் கடந்த 9ஆம் தேதி அவரை கைது செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாரிதாஸ் தன்னை விடுவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, காவல் துறையினர் உரிய முறையில் ஆவணமாக பதிவு செய்யாமல், வீடியோவை மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறி வழக்கை ரத்து செய்தார். ஆனாலும் சென்னையில் போலி இ-மெயில் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், வழக்கு ரத்து செய்யப்பட்ட போதிலும் அவரால் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.