
புரோட்டாவுக்கு அதிக குருமா கேட்டவர் அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்
புரோட்டாவுக்கு அதிக குருமா கேட்டவர் அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கு திருமணம் முடிந்தநிலையில் தனலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆரோக்கியராஜ் தனது வீட்டின் அருகே உள்ள கரிகாலன் என்பருக்கு சொந்தமான ஹோட்டலில் பரோட்டா வாங்கியுள்ளார்.
மேலும், தான் வாங்கிய பரோட்டாவுக்கு கூடுதலாக குருமா தருமாறு ஆரோக்கியராஜ் ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆரோக்கியராஜ் இதுபோன்று அடிக்கடி அதிக குருமா கேட்பதால் இந்தமுறை தரமுடியாது என ஹோட்டல் ஊழியர்கள் கூற, இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியநிலையில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஆரோக்யராஜை, அவரது சாதி பெயரை கூறி ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் திட்டியதோடு, அவரை தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதலில் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆரோக்யராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement