தமிழகம்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.! 100% கொள்ளளவை எட்டிய பல ஏரிகள்.!

Summary:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் முக்கிய நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற இடங்களில் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் மற்றும் சென்னையில் உள்ள பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. ஏரிக்கு நீர்வரத்து 1,086 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல்  தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கியதால், பணிக்கு சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.


Advertisement