இன்று தீக்குளிப்பதாக 2 வாரங்களுக்கு முன்பே அறிவித்த வழக்கறிஞர்: பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் கைது..!

இன்று தீக்குளிப்பதாக 2 வாரங்களுக்கு முன்பே அறிவித்த வழக்கறிஞர்: பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் கைது..!


lawyer-who-announced-arson-2-weeks-ago-arrested-after-t

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14 ஆம் தேதியன்று சாலையை செப்பனிடாததை கண்டித்து 31 ஆம் தேதி (இன்று) தீக்குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் வரை செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அதனால் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் சாலையை செப்பனிடவில்லை என்றால் தான் 31 ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் உள்ள புகைபத்துடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில், அவரை தொடர்பு கொண்ட நகராட்சி அதிகாரிகள், சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது போதிய நிதி இல்லை என்றும் கூறி பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில், அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.