தமிழகம்

இளம் வாலிபர்களை குறிவைத்து ஆபாச வீடியோ கால், போலி வேலைவாய்ப்பு மோசடி.. விழிப்புடன் இருக்க குமரி காவல்துறை அறிவுறுத்தல்.!

Summary:

இளம் வாலிபர்களை குறிவைத்து ஆபாச வீடியோ கால், போலி வேலைவாய்ப்பு மோசடி.. விழிப்புடன் இருக்க குமரி காவல்துறை அறிவுறுத்தல்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு பெயர்களில் மோசடி நடந்து வருவதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதனால் சைபர் கிரைம் மோசடி வலைகளில் சிக்காமல் இருக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வலியுறுத்தி இருக்கிறார். 

இந்த விஷயம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்டத்தில் பகுதி நேர வேலை, ஏ.டி.எம் கார்டு புதுப்பிப்பு, வாட்சப்பில் ஆபாச வீடியோ கால் போன்று ஏமாற்றும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கன்னியாகுமரியில் உள்ள மேக்கா மண்டபம் பகுதியை சார்ந்தவரின் அலைபேசிக்கு பகுதிநேர வேலைக்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. அவரும் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்கையில், வின்ஸெஸ்ட் ஆப்பில் ரீசார்ஜ் செய்தால் வருமானம் கிடைக்கும் என்று கூறிய நிலையில், பல தவணையாக ரூ.4 இலட்சத்து 83 ஆயிரம் செலுத்தியுள்ளார். முதலீடு நிறுவனத்திடம் இருந்து பதில் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதனைப்போல, கோட்டார் பகுதியை சார்ந்தவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் பேசுவதாக கூறி, ஏ.டி.எம் கார்டு புதுப்பிப்பு என்ற பெயரில், கூகிள் பே-க்கு பார்கோடு அனுப்பி இருக்கிறார். இதனை ஸ்கேன் செய்ததும் அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.9.445 பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

மூளகுமூடு பகுதியை சார்ந்த நபரின் வாட்சப் எண்ணுக்கு வந்த வீடியோ காலில் பேசிய பெண் ஆபாசமாக இருந்த நிலையில், வீடியோ காலின் உண்மை தன்மை தெரியாமல் அழைப்பை ஏற்றதும் வாலிபரின் புகைப்படத்தை சேமித்து ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். இந்த விஷயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

காவல்துறையினர் மர்ம கும்பலை கண்டறிய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்களில் சிக்காமல் கவனத்துடன் இருங்கள். பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் அளிக்கவும். காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement