கோவை கார் வெடிப்பு.!.. தீபாவளியைச் சீர்குலைக்க தற்கொலைப் படை தாக்குதலா!?.: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்..!

கோவை கார் வெடிப்பு.!.. தீபாவளியைச் சீர்குலைக்க தற்கொலைப் படை தாக்குதலா!?.: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்..!


Is the Coimbatore car blast a suicide attack to disrupt Diwali?

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை-கோட்டைமேடு பகுதியில், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமான வகையில், சிலிண்டர் வெடித்துச் சிதறிய கார் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கரோனா முழு முடக்கத்திற்குப் பிறகு, இந்த ஆண்டுதான் தீபாவளியை நாடெங்கும் மக்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். இத்தருணத்தில் ஏற்பட்ட இந்த கார் வெடிப்பு நிகழ்வைத் தற்செயலாக நடைபெற்ற சம்பவம் என்று கருதி விடக்கூடாது. தீபாவளியைச் சீர்குலைக்க நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலாக இருக்குமோ? என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை.

சென்னையிலிருந்து விரைந்து வந்த டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த காரை ஓட்டி வந்தவர் 23 வயதான ஜமேசா முபின் எனவும்; விபத்துக்குள்ளான காரில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான இரும்பு ஆணிகள், கோலிகுண்டுகள் போன்ற பொருட்கள் இருந்ததாகவும்; அவரது வீட்டைச் சோதனையிட்ட பொழுது அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டதாகவும்; அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக என்.ஐ.ஏ கண்காணிப்பில் இருந்ததாகவும் வலுவான ஆதாரப்பூர்வ தகவல்களும் வருகின்றன. 

1998 ஆம் ஆண்டு கோவை நகரில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி வாங்கப்பட்டன. அதனால் ஏறக்குறைய 15 ஆண்டுகள் கோவை மாநகரின் பொருளாதாரமே முடங்கிப் போய்விட்டது. தமிழ்நாடெங்கும் எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு பயமும், பீதியும் தலை தூக்கியது.

தற்போது தேசத்தின் எந்த பகுதியிலும் மத மோதல்கள் இல்லை. எனினும், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குத்தேவையான எல்லா விதமான பொருட்களும் கார் வெடிப்பில் இறந்து போன ஜமேசா முபின் கோவை நகர் வீட்டில் கைப்பற்றப்பட்டு இருப்பதை மிகப்பெரிய சதி திட்டத்திற்கான முன்னோடியாகவே கருதப்பட வேண்டும்.

இந்த கார் வெடிப்பின் மூலமாக, தற்போது இறந்து போனவரின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெளிவாகத் தெரிகிறது. இதேபோன்று கோவை மாநகரிலும், தமிழக முழுவதும் எத்தனை இடங்களில் எவரெவரால் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது; இது எப்படிப்பட்ட கலவரத்தை உருவாக்குவதற்கு அல்லது எவ்வளவு பெரிய அசம்பாவிதங்களை நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்ற உண்மையும் உடனடியாக கண்டுபிடித்தாகவேண்டும்.

கட்சி - அரசியல் என்பது வேறு; மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய ‘அரசின் பொறுப்பு’ என்பது வேறு. 1998 ஆம் ஆண்டு அப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட மென்மையான போக்கே அவ்வளவு பெரிய உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் நெஞ்சுரத்துடன் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும் நிலை ஏற்படும். பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கும்; தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் உண்டான புகலிடமாக தமிழகத்தை கருதுவதற்கு இன்று இருக்கக்கூடிய ஆட்சி- அதிகாரம் இடம் கொடுத்து விடக்கூடாது. தீவிரவாத வன்முறை செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என வெற்றறிக்கைகளை கொடுத்துவிட்டு, நடைமுறையில் அவை கரும்பு கரங்களாகவும்; துரும்பு கரங்களாகவும் இருந்து விடக் கூடாது. மேலும், உடனடியாக தமிழக-கேரள எல்லைகளை சீல் வைக்க வேண்டும்; என்.ஐ.ஏ உள்ளிட்ட தேசிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுடைய பணியை விரைந்து ஆற்றிடவேண்டும்.

தமிழகத்தில் வாழுகின்ற 8 கோடி தமிழ் மக்களின் உயிரையும், உடைமையையும் காக்கின்ற பொறுப்பு இன்றைய ஆளும் அரசிடம் இருக்கிறது.  அந்த கடமையிலிருந்து இந்த அரசு தவறும் பட்சத்தில் அதற்கான தண்டனையை இவ்வரசு சந்திக்க நேரிடும். டிஜிபி அவர்களின் மேற்பார்வையில் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு வீடு வீடாக - வார்டு வார்டாக சல்லடை போட்டு தேடி, இந்த நாசக்கார கும்பலின் தொடர்புகளை முழுமையாக கண்டறிந்து, இத்தீவிரவாத கும்பலின் வேர்கள் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும் என புதியதமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சமூக நலன் விரும்பியும் தமிழகத்தை கலவர பூமி ஆக்குவதற்கான இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த தீவிரவாத கும்பல்களிடம் இருந்து தங்களை முற்றாக விலக்கிக் கொள்ளும்படியும், தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.