
கோவை மாவட்டத்தில் குளிக்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ராசு என்பவர் அவரது மனைவி மல்லிகாவுடன் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே தங்கி இருந்து தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ஒரு தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக ராசு, அவருடைய மனைவி மல்லிகா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வேலை முடிந்ததும் ராசு, குளிப்பதற்காக அங்குள்ள ஆற்றுக்கு சென்றுள்ளார்.
குளிக்க சென்ற ராசு நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் மல்லிகா, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் ராசுவை தேடிச் சென்றனர். அப்போது அந்த ஆற்றுக்குள் ராசு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மல்லிகா அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால் மல்லிகாவும் சில நிமிடத்தில் மயங்கிய நிலையில் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். மேலும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, அந்த ஆற்றுக்குள் மின்கம்பி அறுந்து கிடந்ததும், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருப்பதால், ராசுவும், மல்லிகாவும் மின்சாரம் தாக்கி பலியானதும் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி ராசு, மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement