வறுமையின் உச்சம்! 3 பேரின் கைகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு குளத்துக்குள் குதித்த தாய், மகள்கள்!

வறுமையின் உச்சம்! 3 பேரின் கைகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு குளத்துக்குள் குதித்த தாய், மகள்கள்!



family-members-commit-suicide

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு ரோட்டில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர் வடிவேல் முருகன்-பங்கஜம் தம்பதியினர். இவர்களுக்கு மைதிலி, மாலா என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். வடிவேல் முருகன் தச்சு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

கொரோனா சமயத்தில் போதிய வருமானம் இல்லாததால் இவர்களது குடும்பம் அன்றாடம் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வடிவேல் முருகனின் இரண்டு மகள்களும் திருமண வயதை எட்டினாலும் குடும்ப வறுமையால் அவர்களுக்கு வரன் பார்க்க முடியாமல் இருந்துவந்துள்ளனர்.

இந்தநிலையில், நாகர்கோவில் அருகே சுசீந்திரம் நல்லூரில் உள்ள குளத்தின் படித்துறை அருகில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பங்கஜம், மைதிலி, மாலா ஆகியோர் தண்ணீரில் மிதந்தனர். இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்களது  3 பேரின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. அவர்களில் 2 பேர் இறந்து இருந்ததும், மைதிலி மட்டும் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது. 

இதனையடுத்து போலீசார் அந்த கயிற்றை அவிழ்த்து உயிருக்கு போராடிய மைதிலியை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த தாய் பங்கஜம், மகள் மாலா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் உயிருக்கு போராடிய மைதிலிக்கு நினைவு திரும்பியது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் தனது தந்தை தச்சு வேலை செய்து வந்தார். அவரது உழைப்பில்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். போதிய வருமானம் இல்லாததால் நாங்கள் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வந்தோம். என்னுடைய தந்தைக்கு சமீபத்தில் திடீரென்று காலில் அடிபட்டது. இந்தநிலையில் அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு மருத்துவம் பார்க்க எங்களால் முடியவில்லை. அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு பல நாட்கள் தண்ணீரை குடித்தே பசியை போக்கினோம்.

இந்தநிலையில் எனது தந்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இறந்து விட்டார். இதனையடுத்து அப்பா இல்லாமல் நாம் என்ன செய்ய போகிறோம். இனி எப்படி வாழ்வது என்று என்னுடைய தாய் கூறினார். எனவே நாங்கள் 3 பேரும் சேர்ந்து தற்கொலை முடிவுக்கு வந்தோம்.

இதனால் என்னுடைய தந்தையின் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு எங்கள் 3 பேரின் கைகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு குளத்துக்குள் குதித்தோம் என அழுதபடி கூறியுள்ளார். குடும்ப வறுமையால் கணவர் இறந்ததும், குளத்தில் குதித்து மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.