இட ஒதுக்கீட்டை வரையறுக்க வழிகாட்டுதல் நெறிமுறைகள்: துணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவு..!Draft policy to provide four per cent reservation in promotions to persons with disabilities

அரசு பணியில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்க வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.i

தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-  மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணியில் பதவி உயர்வில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், அரசு அலுவலர்களை கொண்ட துணைக்குழுவை அமைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய மாநில வரைவுக் கொள்கையை உயர்மட்டக் குழுவுக்கு, ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

அதை அரசு பரிசீலனை செய்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை, சட்டத்துறை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் துணைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக துணை இயக்குநர் (பயிற்சி), உதவி இயக்குநர் (பணியமர்த்தல்), சட்ட ஆலோசகர் ஆகிய ஏழு பேர் கொண்ட துணைக் குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியில், பதவி உயர்வில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து துணைக்குழு கூறும் கருத்துகளை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது