அரசியல் தமிழகம்

பாமகவை விமர்சித்த திமுக எம்.பி தயாநிதிமாறன்.! கார் கண்ணாடியை நொறுக்கிய பாமக-வினர்.! சேலத்தில் பரபரப்பு.!

Summary:

தாயாநிதிமாறன் வாகனம்மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" நிகழ்ச்சியில் திமுக எம்பி தயாநிதிமாறன் பங்கேற்றார். 

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அவரிடம் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாமக யாருடன் பேரம் பேசுகிறது என்ற தகவல் தனக்கு தெரியாது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் பாமக பெற்றதாக பேசப்பட்டு வந்ததாகவும், இந்த முறையும் பாமக தரப்பில் பேரம் பேசப்படுவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது என தெரிவித்தார்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாகக் கூறி கருப்பு கொடி காட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் தயாநிதி மாறன் பயணித்த வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் மாறன் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலை முற்றுகையிட்ட பாமகவினர் தயாநிதி மாறனை கண்டித்துக் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement