கொரோனாவை கொல்லும் மைசூர்பா..! வெறும் 800 ரூபா தான்..! வைரலான கடை விளம்பரம்..! சோதனை செய்த அதிகாரிகள்.!



Corono cure mysore pak officers sealed sweet shop

கொரோனாவை ஒழிக்கும் மைசூர்பா என கோவையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றின் விளம்பரம்  கடந்த சில நாட்களாக வைரலாகிவந்தநிலையில் தற்போது அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் வேகமாக நடந்துவருகிறது, இருப்பினும் இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் "ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம்... ஆம் மக்களே இது சின்னியம்பாளையத்திலும் வெள்ளலூரிலும் நிறைவேறியது. கொரோனாவுக்கு எதிரான இந்த மூன்றாம் உலகப்போரில், பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக எங்களது மைசூர்பாவை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்", என போஸ்டர் ஒன்றை அச்சடித்து கோவையில் உள்ள இனிப்பு கடை ஒன்று விளம்பரம் செய்தது.

விளம்பரத்தை பார்த்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடையில் அலைமோத தொடங்கினர். கொரோனா கொல்லி மைசூர்பா, மூலிகை மைசூர்பா என்று வெவ்வேறு பெயர்களில் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில்  இந்த தகவல் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாக உடனே அதிகாரிகள் கடையை சோதனையிட சென்றனர்.

எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அவர்கள் இந்த விளம்பரத்தை அச்சடித்து வியாபாரம் செய்தது தெரிய வந்தது. இதனை  அடுத்து சுமார் 120 கிலோ மைசூர்பாவை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை சோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.