சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!



Corona increased in chennai

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக அதிகரித்துள்ளது.

corona

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில்தான் உள்ளனர்.

சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. நகரில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று நேற்று புதிய உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 509 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சென்னையில் கடந்த 8-ந் தேதி 399 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இதுவரை அதிக எண்ணிக்கையாக இருந்தது. ஆனால் நேற்று அதையும் விட அதிகமாக 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.