துபாயில் சித்ரவதைகளை தாங்கி தவித்த சென்னை பெண் மீட்பு; ஆனந்த கண்ணீரில் உறவினர்கள்..!

துபாயில் சித்ரவதைகளை தாங்கி தவித்த சென்னை பெண் மீட்பு; ஆனந்த கண்ணீரில் உறவினர்கள்..!



Chennai Tondiarpet Woman Rescue Form Dubai by State and Central Govt

வேலைக்காக துபாய் சென்ற பெண்மணி சித்ரவதை செய்யப்பட்ட நிலையில், மத்திய-மாநில அரசுகளின் உதவியால் அவர் மீட்கப்பட்டார்.

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் வசித்து வருபவர் புவனா. இவரின் கணவர் ஜேம்ஸ் பால். இவர் கூலித்தொழிலாளி ஆவார். தம்பதிகளுக்கு விசினா (வயது 16), விதியா (வயது 14) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தம்பதி வருமானம் இன்றி தவித்த காரணத்தால், வெளிநாட்டுக்கு சென்று வேலைபார்க்க திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி, சூளைமேடை சேர்ந்த ஏஜென்ட் மூலமாக துபாயில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் பேசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள காவல் துறையில் பணியாற்றும் நபரின் வீட்டு வேலைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். புவனா வேலைக்கு சேர்ந்த நாட்களில் இருந்து அவரை சித்ரவதை செய்த நபர்கள், தினமும் காலை 5 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை ஓய்வில்லாமல் வேலை வாங்கியுள்ளனர்.

chennai

உடல் களைப்பால் புவனா ஓய்வெடுக்கும் பட்சத்தில் அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். அவருக்கு பேசியபடி ஊதியமும் தராமல் மாதம் ரூ.26 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். செல்போனிலும் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரத்த காயம் ஏற்படும் அளவுக்கு புவனாவை துன்புறுத்திய கொடுமைக்காரர்கள், ஒருகட்டத்திற்கு மேல் கழிவறையில் உறங்க நிர்பந்தித்துள்ளனர்.

இதனால் புவனா தன்னிலையை விடியோவாக பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பவே, அவர்கள் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதல்வரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசுடன் இணைந்து புவனாவை மீட்கும் பணியானது கையில் எடுக்கப்பட்டது. அவர் மீட்கப்பட்டு தமிழ் சங்கத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இன்று அல்லது நாளை தாயகம் திரும்புவார். இந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.