தனது தந்தைக்காக மருத்துவமனையிலேயே திருமணம்; நெகிழ வைத்த மகன்.!

உயிருக்கு போராடும் தனது தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்து கொண்ட மகன் அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சுதேஷ். திருவெற்றியூரை சேர்ந்த இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் இளைய மகன் சதீஷ் என்பவருக்கு பிப்ரவரி 15ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்பாராமல் கடந்த 11ம் தேதி நடந்த ரயில் விபத்தின் மூலம் தனது இரண்டு கால்களையும் இழந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் தனது அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மகன் சதீஷ் திருமணத்தை காண வேண்டும் என்று தனது குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பெண் வீட்டாருடன் பேசிய குடும்பத்தினர் மிகவும் எளிமையான முறையில் மருத்துவமனை வளாகத்திலேயே திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்த மகன் சதிஷ் தனது தந்தையிடம் ஆசி பெற்றார். இந்நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைவரின் மனதையும் நெகிழ வைக்கும் விதமாக அமைந்தது.