அம்மாவுடன் சண்டை.. சென்னை வந்த கடலூர் சிறுமி.. தாயின் கண்ணீர் துடைத்த பெண் ஆட்டோ ஓட்டுநர்.!

அம்மாவுடன் சண்டை.. சென்னை வந்த கடலூர் சிறுமி.. தாயின் கண்ணீர் துடைத்த பெண் ஆட்டோ ஓட்டுநர்.!



Chennai Corporation Police Commissioner Thanks to Woman Auto Driver

தாயிடம் சண்டையிட்டு சென்னைக்கு தனியே வந்த 16 வயது சிறுமி, பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியின் வாழ்க்கையை காப்பாற்றிய பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார். 

சென்னையில் உள்ள கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில், மாநகர போக்குவரத்து பேருந்து நுழைவு வாயிலில் ஜன. 30 ஆம் தேதி 16 வயது சிறுமி நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுள்ளார். இதே பேருந்து நிலையத்தில் கடந்த 4 வருடமாக ஆட்டோ ஒட்டி வரும் அம்பத்தூரை சேர்ந்த உஷா (வயது 48) என்ற பெண்மணி சிறுமியை கவனித்துள்ளார். 

சிறுமியிடம் அவர் எங்கு செல்ல வேண்டும் என்று பேச்சு கொடுக்கையில், நான் கடலூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். சுதாரித்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் உஷா, சிறுமி பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி வந்திருக்கலாம் என்பதை உறுதி செய்து, நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி, கோயம்பேடு K11 காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறுமியை ஒப்படைத்துள்ளார். 

chennai

காவல் அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை சேர்ந்த சிறுமி என்பதும், தாயிடம் சண்டையிட்டு சென்னை வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயாரை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்த கோயம்பேடு காவல் துறையினர், சிறுமியை அவரின் தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

மேலும், சிறுமியை தகுந்த நேரத்தில் காப்பாற்றி, மீண்டும் தாயிடம் ஒப்படைக்க உதவி செய்த பெண் ஆட்டோ ஓட்டுநர் உஷாவை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் வெகுமதி வழங்கினார்.