வைபை டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்.? கொஞ்சம் அசந்தாலும் அவளோ தான்.! உஷார் மக்களே.!



careful-to-use-wifi-debit-and-credit-card

பல தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகளில் வைபை வசதிகளை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏ.டி.எம் எந்திரங்களை பயன்படுத்தினாலோ அல்லது கார்டை பயன்படுத்தி பொருள் வாங்கினாலோ ரகசிய குறியீட்டு எண் தேவையில்லை. இது வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது.

ஏடிஎம் மையங்களில் தவறவிடும் வைபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து திருடி அதன் மூலம் பல ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடும் ஒரு நபரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு, சின்மயா நகரை சேர்ந்த நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு அவரது வைபை ஏ.டி.எம். கார்டை மறந்துவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு தவறவிட்ட கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனையடுத்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுத்த இடத்தை ஆய்வு செய்தபோது, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது, ஒரு வாலிபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ‘வைபை’ கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் என பலமுறை எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.

wifi cardஅந்த நபர் அடிக்கடி வந்து பணம் எடுத்து சென்றதால்அவர் மீது சந்தேக வந்த பெட்ரோல் நிலைய ஊழியர் அந்த நபரை புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். அந்த அந்த புகைப்படத்தை வைத்தும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் அந்த நபரை தேடிவந்த நிலையில், கரூரைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்கள், ஞாபக மறதியால் தவறவிட்டு செல்லும் ‘வைபை’ ஏ.டி.எம்.கார்டுகளை மட்டும் குறிவைத்து திருடி, இதுபோல் பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டனிடம் இருந்து 6 ‘வைபை’ ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுபோன்ற டெபிட், கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனமுடன் பயன்படுத்துவதோடு கார்டு தொலைந்து போனால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து அவற்றின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.