குழந்தையை கடத்திய குட்டியம்மா; குறிவைத்து பிடித்த சென்னை காவல்துறை! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி

குழந்தையை கடத்திய குட்டியம்மா; குறிவைத்து பிடித்த சென்னை காவல்துறை! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி


boy kidnapped in chennai and found in 7 hours

சென்னையில் பணத்திற்காக ஆசைப்பட்டு 3 வயது சிறுவனை கடத்திச் சென்ற குட்டியம்மா என்ற பெண்ணை சிறுவன் கடத்தப்பட்ட 7 மணி நேரத்தில் சென்னை காவல் துறையினர்  கைது செய்து சிறுவனை மீட்டனர். காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை புளியந்தோப்பு யோகிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் துர்காதேவி தம்பதியினருக்கு அஜய் என்ற 3 வயது மகனும் ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். மூன்று வயது சிறுவன் அஜய் வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் படித்து வருகிறார். தினந்தோறும் அவரது தந்தையான பிரகாஷ் காலையில் பள்ளியில் விட்டுவிட்டு மாலையில் மீண்டும் அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுவதற்கு முன்பே சிறுவனை அழைப்பதற்காக இரண்டு பெண்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆசிரியை மேனகாவிடம் தங்களை அஜய்யின் உறவினர்கள் எனவும் சிறுவனை அவர்களுடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளனர். இவர்கள் மேல் சந்தேகமடைந்த ஆசிரியை மேனகா சிறுவனின் தாய் துர்காதேவிக்கு அலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். ஆசிரியையிடம் தன் கணவர் தான் யாரையாவது அனுப்பி வைத்து இருப்பார் எனவே அவர்களுடன் குழந்தையை அனுப்பி வைக்குமாறு துர்காதேவி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆசிரியை மேனகா அந்த இரண்டு பெண்களுடன் சிறுவன் அஜய்யை அனுப்பி வைத்துள்ளார்.

மாலை நெடுநேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளியில் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் அஜய் கடத்தப்பட்ட சம்பவம் அவர்களுக்கு தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து மாலை 6 மணிக்கு அவர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். 

இவர்களின் புகாரையடுத்து உதவி ஆணையர் சாய்சரண் தேஜஸ்வி, ஆய்வாளர் ரவி தலைமையில் காவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒரு கண்காணிப்பு கேமராவில் அஜயை 2 பெண்கள் தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அப்போது அந்த வீடியோ பதிவில் இருந்த ஒரு பெண் பிரகாஷின் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு கட்டிட பணியாற்றியவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

boy kidnapped in chennai and found in 7 hours

பின்னர் அந்தப் பெண்ணின் முகவரியை கண்டறிந்து  காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அந்த  பகுதியில் காவல்துறையினர் மறைந்திருந்தனர். நள்ளிரவில் அந்தப் பெண் வீட்டிற்கு வந்தார் அப்போது அவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் தான் சிறுவன் அஜய்யை கடத்தினார் என்பது தெரியவந்தது. மேலும் சிறுவன் வீட்டின் அருகிலிருந்த ஆட்டோவில் இருப்பதும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவனை கடத்திய பெண் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்த குட்டியம்மா (38) என்றும் அவருடன் வந்தவர் ஓட்டேரியில் வசிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா (20) என்பதும் தெரியவந்தது. ஓட்டேரியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்புவதாகவும், அதற்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் குட்டியம்மாவிடம் கூறியுள்ளார்.

இதனால் குழந்தையை கடத்தி அந்த பெண்ணிடம் கொடுத்தால் தனக்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் குட்டியம்மா சிறுவன்  அஜயை கடத்தி உள்ளார். 

இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட குட்டியம்மா மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாவை காவல் துறையினர் கைது செய்தனர். சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் சிறுவனை காவல் துறையினர் மீட்டனர். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் ரவி காலில் விழுந்து துர்காதேவி நன்றி தெரிவித்தார்.