ஆசையாக வாங்கிக்குடித்த ரோஸ்மில்க் எமனான பரிதாபம்.. 11 வயது சிறுவனின் உயிரை பறித்த கொடூரம்.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்..!boy-dead-by-drinking-rosemilk

ரோஸ்மில்க் வாங்கி குடித்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கண்ணகி நகர் ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திவ்யா என்ற ஒரு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

தம்பதிகளின் 2வது மகன் வசந்தகுமார் (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் பயின்று வரும் நிலையில், நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு விளையாட சென்றுள்ளார்.

விளையாடி முடித்த பின் பூங்காவிற்கு அருகே உள்ள பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துவிட்டு சிறுவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வசந்தகுமார் மயங்கி விழுந்துள்ளார்.

chennai

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா தனது மகனிடம் என்ன ஆயிற்று? என்று கேட்டபோது ரோஸ்மில்க் வாங்கி குடித்ததில் இருந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக திவ்யா 108 மருத்துவ ஊர்தியின் மூலமாக வசந்தகுமாரை ஈச்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்த நிலையில், அதிர்ந்துபோன திவ்யா காவல்துறையினருக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

chennai

மேலும், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் பெத்துராஜ் என்பவரின் கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தது தெரியவந்தது. இதனால் பெத்துராஜிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் வீட்டிலேயே ரோஸ்மில்க் தயாரித்து கொடுத்ததை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் ரோஸ்மில்க் தயாரித்து கொடுத்த முருகானந்தமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.