பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றிய 3 வாலிபர்கள்: ரோந்து சென்ற போலீசாருக்கு அடித்தது லக்..!3 youths in auto with deadly weapons

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகேயுள்ள பொத்தேரி பகுதியில், பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றிய மூன்று பேரை, மறைமலை நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொத்தேரி ரயில்வே கேட் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, மறைமலை நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நேரத்தில், அந்த வழியாக அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலித்தபடி வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30), மூவரசம்பேட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி (27) மற்றும் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் பேசியதால், ஆட்டோவை சோதனை செய்ததில் மூன்று பட்டா கத்திகள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 11 ஆம் தேதி மறைமலை நகர் வள்ளல் சீதக்காதி தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி 2, 700 ரூபாய் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து ஆட்டோ மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மூவர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.