புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"குலம் காக்கும் குலதெய்வம்" குலதெய்வ வழிபாட்டு முறைகளை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.!?
குலதெய்வ வழிபாட்டு முறைகள்
பொதுவாக ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு குலதெய்வத்தை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தற்போது வரை வழிபட்டு வருகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது முந்தைய காலத்தில் இருந்து தற்போது வரை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் குறைந்து காணப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் எல்லாவிதமான சடங்குகளுக்கும் குலதெய்வ வழிபாட்டு முறை பின்பற்றுகின்றனர்.
குறிப்பாக குலதெய்வத்தை குறிப்பிட்ட நாளில் மட்டுமே வழிபட வேண்டும் என்று கட்டாயம் அல்ல. ஒரு காரியத்தை நினைத்து விட்டு அது நடந்து விட்டால் உடனே பொங்கல் வைத்து, கிடா வெட்டி குல தெய்வத்தை வழிபடுகின்றனர். ஒரு சில குலதெய்வ கோயில்களில் திருவிழாக்களின் போது கொடியேற்றுதல் தொடங்கி, கரகம் எடுத்தல், குண்டம் எடுத்தல், பூ மிதிப்பது, சாமி ஆடுவது, மஞ்சள் நீராட்டு போன்ற பல வகையான சடங்குகளை செய்து வருகின்றனர்.
குலதெய்வ கோயில்களின் நடைமுறைகள்
குலதெய்வ கோயில்களில் நேர்த்தி கடனாக பலியிடுவது, மொட்டை அடிப்பது, காணிக்கை செலுத்துவது, வேல் செலுத்துவது, உருவம் செய்து வைப்பது, அரிவாள் அடித்து வைத்தல், தொட்டில் கட்டுவது என்ற பலவகையான நேர்த்திக்கடன்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. நம் முன்னோர்களை நினைத்து குலதெய்வத்தை வழிபடுவதால் கேட்ட வரம் கண்டிப்பாக கிடைக்கும் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவி வருகிறது.
மயான பூஜை
மாசாணி அம்மன், அங்காளம்மன் போன்ற காளி கோயில்களில் மயான பூஜை என்பது சிறப்பு வாய்ந்தவையாக கருதப்பட்டு வருகிறது. இந்த கோயில் வழிபாட்டின் போது மயானத்தில் அம்மனின் திருவுருவம் மண்ணிலும், மாவிலும் செதுக்கி வைக்கப்படும். அந்த உருவத்தின் முன்னால் ஆடு, கோழி போன்றவைகளை பலியிட்டு ரத்தத்தை காணிக்கையாக தருவதால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
அன்னதானம் அல்லது படையல்
பொதுவாக குலதெய்வ கோயில்களில் பலியிடப்பட்ட ஆடு அல்லது கோழியை பக்தர்களுக்கு படையலிடப்படுகிறது. இந்த உணவை உண்பதால் நோய் நொடிகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்று கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு குலதெய்வ கோயிலுக்கென்று தனிச்சிறப்பு இருந்து வருகிறது.