கொரோனா சமயத்தில் புதிய கேப்டனை தேர்ந்தெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!pakistan-new-captain-announced

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு இருப்பதாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மிஸ்பா உல் ஹக்கின் ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். வருகிற ஜூலை மாதம் வரை பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் போட்டி எதுவுமில்லை என்பதால் ஒருநாள் போட்டி கேப்டன் பற்றி எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

Babar azam

இந்த நிலையில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் 2020-2021 பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக இருந்து வரும் பாபர் அசாம் இனிமேல் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாபர் அஸாம் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 26 டெஸ்டுகள், 74 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.