சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் சுருண்ட மும்பை.! டெல்லியிடம் சூறாவளி ஆட்டம்.!

நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது.


mumbai-indians-won-delhi-capitals

ஐபிஎல் 2020 டி20 தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் தீவிர முயற்சியுடன் களமிறங்கினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் களமிறங்கினர். ரோகித் சர்மா 2-வது ஓவரில் அஸ்வின் வீசிய முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிய டி காக் 40 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து அதிரடியாக ஆடிய  சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பொல்லார்ட், அஸ்வின் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினர். இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் அவுட் ஆகாமல் இறுதிவரை நின்றனர்.

Delhi capitals

இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய ஓவரில் பிரித்வி ஷா, அடுத்து வந்த ரஹானே இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். 

இதனையடுத்து களமிறங்கிய ஷிகர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 12 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். டெல்லி அணி 20 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் 65 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 42 ரன்களும் எடுத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். ஆனால் 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது.