விளையாட்டு

டெஸ்ட் மேட்ச் போல் ஆடிய கேதர் ஜாதவ்.! இவரை இறக்கியிருக்கலாமே..! கடுப்பாகும் சிஎஸ்கே ரசிகர்கள்.!

Summary:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 21வது லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து சுப்மான் கில் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

கொல்கத்தா அணியின் கில் 11 ரன்னிலும், அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ் ராணா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சுனில் நரைன், 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.  மோர்கன் 7 ரன்களுடனும், ரஸ்செல் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணியில் துவக்க வீரராக களமிறங்கி இறுதிவரை ஆடிய திரிபாதி 51 பந்துகளுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 167 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியது. டு பிளிஸ்சிஸ் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். வாட்சன், ராயுடு ஆகியோர் அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார். இதுவரை எந்த ஆட்டத்திலும் சரியாக விளையாடாதா கேதர் ஜாதவ் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடினார் ஜாதவ். ரசிகர்கள் பொறுமையை இழந்தனர். இறுதியாக 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார் கேதர் ஜாதவ். அதிரடியாக ரன் சேர்க்க கூடிய பிராவோவை முன் கூட்டிய களமிறக்கியிருந்தால் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும் என கூறுகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள். இறுதியில், 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Advertisement