எடப்பாடி பழனிசாமி அளவிற்கு ஸ்டாலின் தொழில்துறையில் கவனம் செலுத்தவில்லை: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடி பழனிசாமி அளவிற்கு ஸ்டாலின் தொழில்துறையில் கவனம் செலுத்தவில்லை: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!


Stalin did not focus on industry as much as Edappadi Palaniswami

தென் மாவட்டங்கள் தொழில்துறையில் வளா்ச்சி பெறுவதற்கான திட்டங்களை தி.மு.க விளக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து நேற்று மதுரையில் செய்தியாளா்கள் சந்திப்பின் போது ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது-:

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தென்மாவட்டங்களில் இதுவரை புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. மதுரை மாநகராட்சியை பொறுத்த வரையில் 'மெட்ரோ ரயில்' திட்டம், அறிவிப்பு இன்னும் பெயரளவில்தான் உள்ளது.

மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இங்கு ஏற்கெனவே உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா இதுவரையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொழில் துறையை மேம்படுத்த மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி தென் மண்டலம் உருவாக்கப்பட்டது.

அப்போது மதுரை-தூத்துக்குடி தொழில் வழிச்சாலைத் திட்டம், மேலூர்-கப்பலூர் 27 கி.மீ. தொலைவிற்கான சாலை விரிவாக்க திட்டம் மற்றும் மேலூா்-காரைக்குடி வரை நான்குவழிச் சாலை திட்டம் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினார். மேலும் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட நத்தம் பறக்கும் சாலை திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதேபோன்று, தென்மாவட்டங்களில் தொழில்துறையின் வளா்ச்சிக்கான திட்டங்களை தி.மு.க அரசு விளக்க வேண்டும் என்று கூறினார்.