ஆற்றின் நீர் வழிதடத்தை காங்கிரீட் தளமாக மாற்றுவதா..?!! பெரும் போராட்டம் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை..!!

ஆற்றின் நீர் வழிதடத்தை காங்கிரீட் தளமாக மாற்றுவதா..?!! பெரும் போராட்டம் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை..!!


Seeman has urged the DMK government to stop its act of destroying the biodiversity by converting the waterways of the Kilpawani river into concrete platforms.

கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றி, பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலை திமுக அரசு கைவிட வேண்டும்  என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடங்களை வேளாண் பெருங்குடி மக்களின் எதிர்ப்பையும் மீறி, கான்கிரீட் தளங்களாக மாற்ற முயலும் திமுக அரசின் கொடுங்கோன்மைச்செயல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளர்ச்சி என்ற பெயரில் ஆற்று நீர்வழித்தடங்களை கான்கிரீட் தளங்களாக்கி, தமிழ்நாட்டினைப் பாலைவனமாக்கும் திராவிட மாடல் அரசின் பொறுப்பற்றத்தனம் வன்மையான கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரினைக் கொண்டு சேர்ப்பதாகக் கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து பாசனவசதி தரும் நீர்வழித்தடங்களை கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் சூழலியல் அறிவியலுக்குப் புறம்பானதாகும். நீர்வழித் தடங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் இடைப்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றுமுழுதாக அற்றுப்போய் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு மற்றும் நிலத்தடிநீர் பாசனமும் வற்றிப்போகும் பேராபத்து ஏற்படும்.

மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் முதலிய நீர்நிலைகளை நிரப்புவதற்கான நீரும் போதிய அளவு கிடைக்காமல் போவதோடு, அவை எளிதில் வறண்டு போகும் சூழலும் ஏற்படும். அதுமட்டுமின்றி, தாவரங்கள், பறவைகள் மற்றும் கால்நடைகள் அருந்துவதற்கான நீரும் பறிபோவதோடு, மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கமும் குறைந்து விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், மண்புழு உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் அருகி, மண்வளம் குன்றுவதால் பல்லுயிர் பெருக்கம் அருகி சுற்றுச்சூழலும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஏற்கனவே, பரம்பிக்குளம் – ஆழியாறு வாய்க்காலில் கசிவுநீர் மூலம் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, நீர்வழித்தடம் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டதினால் பாசனநீர் வேகமாக வெளியேறி, பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடைமடைக்குக் கிடைத்து வந்த நீரும் அதன்பின் கிடைக்கப்பெறாமல் போய்விட்டது. அதனை உணர்ந்தே, கடந்த 2013 ஆம் ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனையடுத்து, அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தைக் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், திமுக அரசு அதனை மீண்டும் நிறைவேற்ற முயன்றபோது, கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப்பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இக்கொடும் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு சூலை மாதம் (22.07.2022) எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் முன்னெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகத் துணைநின்றது. அதன் பிறகு இத்திட்டத்தை தற்காலிமாக கிடப்பில் போட்டிருந்த திமுக அரசு, தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த தீவிரம் காட்டிவருவது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

கடைமடைகளுக்கு நீர் சென்று சேர்ப்பதில் திமுக அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமாயின், பல ஆண்டுகளாகத் தூர்வாராமல் உள்ள வாய்க்கால்களையும், கால்வாய்களையும், ஓடைகளையும் முறையாகத் தூர்வாருவதும், கரைகளை வலுவாகப் பலப்படுத்துவதுமே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனை விடுத்து, விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க திமுக அரசு முயன்றால், இக்கொடுந்திட்டத்தை முழுமையாகத் திரும்பப்பெறும்வரை நாம் தமிழர் கட்சி தொடர்ப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்தை அழித்து, விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கின்ற கொடிய திட்டமான, கீழ்பவானி ஆற்றுநீர் வழித்தடத்தை கான்கிரீட் தளமாக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.