நான் ஒப்புதல் அளிக்காமல் நடைபெறும் எந்த கூட்டமும் செல்லத்தக்கது அல்ல: ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு..!

நான் ஒப்புதல் அளிக்காமல் நடைபெறும் எந்த கூட்டமும் செல்லத்தக்கது அல்ல: ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு..!


O. Panneerselvam said that meeting of the AIADMK leadership is not valid

இன்று நடைபெற உள்ள அ.தி.மு.க  தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லத்தக்கது அல்ல என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று (இன்று) நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக நேற்று திடீர் அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையே இந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் வந்தது கழக சட்ட, திட்ட விதிக்கு எதிரான அறிவிப்பு என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கழக சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும்.

கழக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், கழகத் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.