சென்னையில் வேகமாக பரவும் மற்றொரு வைரஸ் நோய்..! இதுவரை 850 பேர் பாதிப்பு.!



madras-eye-spreading-in-tamil-nadu

சீனவின் உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என்பது சற்று ஆறுதலாக உள்ளது. ஆனால், சென்னையில் மற்றொரு நோய் வேகமாக பரவி வருகிறது. அது வேறு ஒன்றும் இல்லை. மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் தான் அது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 850 பேர் இந்த கண் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றால் கண்ணிலிருந்து பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் திரவம் சுரக்கும். இந்த வைரஸ் பாதிப்பு உள்ள நபருக்கு கண்களில் அரிப்பு உணர்வும், எரிச்சல் உணர்வும் ஏற்படலாம்.

ஒருவாரம் அல்லது 10 நாட்கள் வரை நீடிக்கும் இந்த தொற்றானது தானாகவே சரியாகிவிடும். மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள், கண் மருத்துவர் ஒருவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு கண் சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் போன்ற மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

அதேபோல், மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ள ஒரு நபரை நேருக்கு நேர் பார்ப்பதால் இந்த வைரஸ் மற்றொருவருக்கு பரவாது. வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்டுகளை நாம் தொடும்போது இந்த வைரஸ் நமக்கு பரவ வாய்ப்பு உள்ளது.