இந்தியா

விதிகளை மீறி நடந்த கோலாகல திருமணம்.. மணமக்கள் உட்பட 43 பேருக்கு கொரோனா உறுதி.. பதட்டத்தில் கேரளா அரசு!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கேரளாவில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

இந்த திருமணம் கடந்த 17 ஆம் தேதி கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், செங்கலா பஞ்சாயத்தில் நடைபெற்றுள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், திருமணத்தில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது.

ஆனால் இந்த திருமண விழாவினை ஏற்பாடு செய்த மணமகளின் தந்தை 100 பேருக்கும் மேலானோரை திருமணத்திற்கு அழைத்துள்ளார். தற்போது மணமக்கள், மணமகனின் தந்தை உட்பட அந்த திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் மிகவும் கவலைக்குள்ளான மாவட்ட நிர்வாகம் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களாகவே தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த மணமகளின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.


Advertisement