இந்தியா

இந்த காலத்திலும் இப்படியா?.. சிறுமி நரபலிகொடுக்க முயற்சி.. உயிரைக்காத்த காக்கி காவல் தெய்வங்கள்.!

Summary:

இந்த காலத்திலும் இப்படியா?.. சிறுமி நரபலிகொடுக்க முயற்சி.. உயிரைக்காத்த காக்கி காவல் தெய்வங்கள்.!

7 வயது சிறுமியை நரபலி கொடுக்க கடத்தி சென்ற நிலையில், துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் சிறுமியை பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, சிஜார்ஜி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 13 ஆம் தேதி மாயமாகி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து, சிறுமி மாயமான விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கிராமத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராவையும் ஆய்வு செய்துள்ளனர். இந்த சூழலில், டெல்லியில் உள்ள பாக்பத் பகுதியில் சிறுமி இருப்பது உறுதியானது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்த சோனு பால்மீகி என்பவர் 7 வயது சிறுமியை கடத்தி சென்றது அம்பலமானது. அவரின் கூட்டாளி நீது மற்றும் பாலமீகியை கைது செய்த அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, சோனுவுக்கு தற்போது வரை திருமணம் ஆகாத நிலையில், அவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் வரன் தேடியும் கிடைக்கவில்லை. திருமண விவகாரத்தில் தடை தொடர்ந்த காரணத்தால், தனக்கு தெரிந்த சதேந்திரா என்ற மந்திரவாதியை சந்தித்துள்ளனர். அவர், ஹோலி பண்டிகையன்று சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த யோசனையை சோனு தனது நண்பரான நீதுவிடம் தெரிவிக்கவே, இருவரும் திட்டமிட்டு 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தது தெரியவந்தது. மேலும், நரபலிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், நல்லவேளையாக அதிகாரிகள் சிறுமியின் உயிரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். இவ்வழக்கில், மந்திரவாதி உட்பட பிற 3 பேருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். 


Advertisement