மது போதையால் பிறந்தநாள் விழாவில் நடந்த விபரீதம்... துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்..!!

உத்தரபிரதேசத்தில் 6 வயது குழந்தைக்குயின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா அருகில் உள்ள சதர் கோட்வாலி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 6 வயது குழந்தையின் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் கலந்து கொண்டனர். மது போதையில் இருந்த அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது திடீரென ஒருவன் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டான். துப்பாக்கி குண்டு அருகில் இருந்த தேவ் குமார் (18) என்ற இளைஞனின் வயிற்றில் பாய்ந்ததால் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவ் குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த காவல் துறை எஸ்பி சாரு நிகம், சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, மேல் மாடியில் இருந்த நான்கைந்து இளைஞர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்துள்ளது என்று தெரியவந்தது.
இந்த துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக, காவல்துறையினர் நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் விழாவில் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.