
Time capsule buried in ayothi ramar temple
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தின் போது 2,000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் வைக்கப்பட உள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்துள்ளார். டைம் கேப்சூல் என்பது தற்கால நிகழ்வுகள், ஆவணங்கள், வரலாற்று உண்மைகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு வலிமையான குடுவைக்குள் வைத்து பூமிக்கடியில் புதைப்பது ஆகும்.
இந்நிலையில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயிலை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தி வழக்கு நீண்ட கால சட்டபோராட்டம். இது குறித்து எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும். எனவே ராமர் கோயில் கட்டும்போது கட்டுமானத் தளத்தின் 2 ஆயிரம் அடி ஆழத்தில் கோயிலின் வரலாறு, ராமஜென்மபூமியின் உண்மைகள், புகைப்படங்கள் கொண்ட டைம் கேப்சூல் வைக்கப்படவுள்ளது.
மேலும் கோவில் கட்டுவதற்காக பல்வேறு புனிததலங்களில் இருந்து மண் கொண்டுவரப்படும். ராமர் எந்தெந்த ஆற்றுக்குச் சென்றாரோ அந்த ஆறுகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, பூமி பூஜையின்போது அபிஷேகத்துக்கு அளிக்கப்படவுள்ளது என அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement