தந்தையை வீட்டிலிருந்து துரத்திய மகன்.! பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி.!



retired-police-officer-living-like-beggar

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் போலீஸ் நிலையத்தில் மதுசூதன் ராவ் என்பவர் போலீஸ் பணியில் இருந்துவந்துள்ளார். அவர் 2011-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மதுசூதன் ராவுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் இருந்துள்ளனர். அவரது 3 பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

பணி ஓய்வூதியத் தொகை பெறும் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதனின் மனைவி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் மனவேதனையடைந்த  மதுசூதன்ராவ் மது போதைக்கு அடிமையாகி உள்ளார். தினமும் மது குடித்துவிட்டு வருவதை அவரது மகன் கண்டித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மதுசூதன் ராவை, அவரது மகன் வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டார். இதனால் மேலும் மனவேதனையடைந்த மதுசூதன் ராவ் வீட்டுக்கு செல்லாமல், சாலையோரத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார். தற்போது அவர் பழைய பொருட்களை வீதி, வீதியாக தேடிச் சென்று சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். 

அவரது வங்கி கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் இருப்பு உள்ளது. ஆனாலும் அவர் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார். காவல்துறையினரும் அவருக்கு உதவி செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் தனக்கு சொந்தம் என்று யாரும் வேண்டாம், இந்த வாழ்க்கையே நிம்மதியாக இருக்கிறது என்று அவர் வாழ்ந்து வருகிறார்.