பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு...! வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு..!

பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு...! வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு..!


opposition-to-the-release-of-perarivalan-congress-annou

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்  இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். மீதமுள்ள ஆறு பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும் சட்ட வல்லுனர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறது. கொலை செய்தவர்கள் தமிழர்கள் அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை.

அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா ராஜீவ்காந்தியை கொலை செய்தவர் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் (19.5.2022) நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர், அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு, வன்முறையை எதிர்க்கும் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக்கொண்டு காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை அறப் போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று கே.எஸ்.அழகிரி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.