தமிழகம் இந்தியா

சென்னை வந்து சற்று நேரத்தில் புறப்பட்டார் பிரதமர் மோடி.! கோவையில் உற்சாக வரவேற்புடன் காத்திருக்கும் பாஜக.!

Summary:

பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய இடங்களில் இன்று (25/02/2021) நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார். தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 10.25 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்து  சேர்ந்தார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து 10.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம்  புதுச்சேரி புறப்பட்டார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு மீண்டும் சென்னை வந்து பின்னர் 2.15 மணி அளவில் விமானம் மூலம் கோவை புறப்பட உள்ளார்.

கோவையில், பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். 
 


Advertisement