அரசு பேருந்துகளில் செல்போனில் பாட்டு கேட்க தடை..! மீறினால் என்ன தண்டனை தெரியுமா.?
தற்போதைய நவீன காலக் கட்டத்தில், பேருந்துகளில் பயணிப்போர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களில் பாடல்களை சத்தமாக கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது. வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்ப்பது போன்றவற்றால் மோதல் ஏற்படுகிறது. இரவில் துாக்கம் கெடும் வகையில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது.
இது போன்ற செயல்களால் எரிச்சல் அடைந்த நபர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பான மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பேருந்துக்குள் அதிக சத்தத்துடன் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் செல்போனில் வீடியோ அல்லது பாட்டு கேட்க தடை விதிக்கப்படுவதாகவும், பயணிகளுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை ஓட்டுநர், நடத்துநர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக வெளியேற்றலாம் என அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன்களில் சத்தமாக பாடல்களை கேட்க, திரைப்படங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை மீறுவோரை பேருந்தில் இருந்து இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி அளிக்க தேவையில்லை. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என கூறப்பட்டுள்ளது.