ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு பேர் பலி... உத்திரபிரதேசத்தில் பரபரப்பு...!

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு பேர் பலி... உத்திரபிரதேசத்தில் பரபரப்பு...!


Five-storey building collapses, two people killed... Stirring in Uttar Pradesh...

உத்தரபிரதேசத்தில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சமாஜ்வாடி தலைவரின் தாய் மற்றும் மனைவி  ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் "ஆலயா" என்ற பெயரில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தன.

இந்த குடியிருப்பில் சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹைதரும் தனது தாய் பேகம் ஹைதர் (87), மனைவி உஸ்மா ஹைதர் (30) ஆகியோருடன் வசித்து வந்தார். 

நேற்று முன்தினம் மாலை இந்த ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின்போது கட்டிடத்தில் இருந்த பேகம் ஹைதர், உஸ்மா ஹைதர் உள்பட பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுடன் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து கொண்டனர். 

இந்த மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் பேகம் ஹைதர், உஸ்மா ஹைதர் உள்பட 12-க்கும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் ஹைதர், உஸ்மா ஹைதர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு பேர் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனவே நேற்று காலையிலும் அவர்களை மீட்பதற்காக  தொடர்ந்து மீட்பு பணிகள் நீடித்தன. 

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக முன்னாள் மாநில அமைச்சரும் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வுமான ஷாகித் மன்சூரின் மகன் கைது செய்யப்பட்டு உள்ளார். 

மீரட்டில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக லக்னோ கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இந்த குடியிருப்பை இவர்தான் விற்பனை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நபர் கமிட்டியை அமைத்துள்ள அவர், ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தியுள்ளார். ஐந்து மாடி கட்டிடம் இடிந்து சமாஜ்வாடி தலைவரின் மனைவி, தாய் உயிரிழந்த சம்பவம் லக்னோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.