தேடி வந்த அதிர்ஷ்டம்..!! பணம் கொடுக்காமல் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு..!!



First prize for a lottery ticket bought without paying money

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (55). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தன்னுடைய சகோதரரின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.

நாள் தோறும் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கத்திற்கு சென்று, வேலைக்காக காத்திருப்பது பாபுலாலின் வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு காத்துக்கொண்டிருத அவரிடம், அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் பெண் வந்துள்ளார்.

கேரள அரசின் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டுகள் தன்னிடம் இருப்பதாகவும், குலுக்கல் தேதி நெருங்கிவிட்டதால் லாட்டரி சீட்டுகள் தேங்கி விட்டதாகவும் கூறிய அப்பெண் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு பாபுலாலை வற்புறுத்தியுள்ளார்.

எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள பாபுலால், தற்போது தன்னிடம் லாட்டரி வாங்க பணம் இல்லை என்றும் அடுத்த குலுக்கலில் வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தற்போது லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறும், அவற்றுக்கான பணத்தை பிறகு பெற்றுக் கொள்வதாகவும் கூறி 2 லாட்டரி சீட்டுகளை கொடுத்துள்ளார்.

நேற்று கேரள அரசின் லாட்டரி சீட்டுகளுக்கான குலுக்கல் நடந்த நிலையில், பாபுலால் வைத்திருந்த லாட்டரிக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்துள்ளது. பணமே கொடுக்காமல் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்ததை அறிந்த பாபுலால், இது தன்னை தேடி வந்த அதிர்ஷ்டம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.