இந்தியா

வீட்டினுள்ளே தூங்கி கொண்டிருந்த தம்பதியினரை நள்ளிரவில் உயிரோடு எரித்த கிராமத்தினர்! வெளியான பகீர் காரணம்!

Summary:

Couple burnt to death on witchcraft suspicion in Odisha

ஒடிசா மாநிலம், ஜெய்ப்பூர் அருகே நிமபல்லி சுரஷாய் கிராமத்தில் வசித்து வந்தவர் 60 வயது நிறைந்த சரல் பலிமுச்சா. இவரது மனைவி சம்பாரி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த போது, அவர்களது வீட்டை சுற்றிவளைத்த  அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதில் தீ வீடு முழுவதும் கொழுந்துவிட்டு பரவிய நிலையில், கணவன்-மனைவி இருவரும் தீயில் எரிந்து உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த சரல் பலிமூச்சாவின் மகள் மற்றும் மருமகன் இருவரும் கருகிய நிலையில் கிடந்த இருவரின் சடலத்தையும் கண்டு கதறித் துடித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் திடீரென 7 சிறுவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கிராமத்தினர், சரல் மற்றும் சம்பாரி இருவரும் பில்லி சூனியம், மாந்திரீகம் போன்ற செயல்களை செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்துள்ளது என நம்பியுள்ளனர். 

 இந்த கோபத்திலே அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் உயிரோடு வைத்து தீயிட்டு  கொளுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement