
Child head struggled in cooker at gujarat
குஜராத் மாநிலம் பவா நகரில் பிரியன்ஷி வாலா என்ற ஒரு வயது பெண் குழந்தை நேற்று குக்கரை வைத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது குழந்தை குக்கரை தலையில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குக்கர் தலையில் மாட்டிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை அழுதநிலையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதன் பெற்றோர்கள் குக்கரை தலையிலிருந்து எடுக்க தீவிரமாக முயற்சி செய்துள்ளனர். ஆனால் எடுக்க முடியவில்லை.
உடனே அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் என பலரும் அடுத்தடுத்தாக தொடர்ந்து குழந்தையின் தலையிலிருந்து குக்கரை எடுக்க முயற்சி செய்துள்ளனர். அதில் எந்த பலனும் இல்லை. ஆனால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு கடுமையாக வீங்க துவங்கியது.
அதைத்தொடர்ந்து நிலைமையை உணர்ந்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைகள் மருத்துவர் முதல் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் வரை அனைவரும் குழந்தையின் தலையிலிருந்து குக்கரை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது முடியாமல் போகவே பாத்திரத்தை பழுதுபார்க்கும் நபர் ஒருவர் அழைத்துவரப்பட்டு குக்கரை வெட்டி எடுத்து குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
மேலும் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தம், மற்றும் தலைப்பகுதிக்குள் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement