கொரோனா அச்சம்! சிகிச்சையளிக்க மறுத்தநிலையில், சாலையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! வைரலாகும் கண்கலங்க வைக்கும் வீடியோ!



breathless-man-died-on-hydrabad-road

ஹைதராபாத் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்த 31 வயது நிறைந்த நபர் பிருத்விராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 9 மாத ஆண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ப்ரித்விராஜ்க்கு கடந்த 10 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. மேலும் மூச்சுத்திணறல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரி அவரை ஈ.சி.ஐ.எல் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக உணர்ந்த மருத்துவர்கள், அவருக்கு 10 நிமிடங்கள் ஆக்சிஜன் வழங்கி வேறு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்காததால், ஆட்டோவில் செல்லவதற்காக அவர்கள் சாலையில் காத்திருந்தபோது, திடீரென அந்த நபர் சரிந்து விழுந்துள்ளார்.  அதனைதொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரி சாலையில் உயிரிழந்து கிடந்தவரை கண்டு கதறிதுடித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அறிகுறிகள் இருந்து சந்தேகிக்கப்படும் நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். அவ்வாறுதான் அவரையும் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என கூறியுள்ளனர்.