"அவர்கள் பேசிவிட்டு பிறகு தான் யோசிப்பார்கள்" கணினி ஆய்வுக்கு எதிராக பேசிய காங்கிரஸ் கட்சி குறித்து அருண் ஜெட்லி கடும் தாக்கு

"அவர்கள் பேசிவிட்டு பிறகு தான் யோசிப்பார்கள்" கணினி ஆய்வுக்கு எதிராக பேசிய காங்கிரஸ் கட்சி குறித்து அருண் ஜெட்லி கடும் தாக்கு



arun jetlee explain about computer snooping

நாட்டில் உள்ள எந்தக் கணினியையும் ஆய்வு செய்து, அதில் உள்ள தகவல்களை யாருடைய அனுமதியின்றி எடுக்க 10 அரசு முகமைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியும், அறிவிக்கப்படாத அவசரநிலை என்று ஆம் ஆத்மி கட்சியும் மற்றும் பல மாநில எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை மீதான தாக்குதலாகவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பார்க்கிறோம். அந்தரங்க அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நேர் எதிராக அரசு நடக்கிறது. மத்திய அரசு அதன் வலிமைக்குச் செயல்பட்டால், அதைக் கூட்டாக எதிர்ப்போம். 10 அரசு விசாரணை முகமைகளும் கணினித் தகவல்களை அனுமதியில்லாமல் பெறுவதும், கண்காணிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

computer

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில் “ மோடி அரசு அடிப்படை உரிமைகளையும், அந்தரங்க உரிமைகளையும் வெட்கமே இல்லாமல் கிண்டல் செய்கிறது, தண்டனைக் கிடைக்காது என்ற ஆணவத்தில் மீறுகிறது. தேர்தலில் கிடைத்த தோல்வியால், மோடி அரசு உங்களின் கணினிகளை ஆய்வு செய்கிறது?. பெரிய அண்ணன் போல் நடந்து கொள்வதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மரபணுவாகும் “ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களுக்கு விளக்கமளித்துள்ள மத்திய மந்திரி அருண்ஜேட்லி, "தேசத்தின் பாதுகாப்பு கருதியே, அனைத்து கணினிகளையும் உளவு பார்க்கும் அதிகாரம் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், 2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்". 

மேலும் காங்கிரஸ் கட்சியினரை கேலி செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "காங்கிரஸ் கட்சியினர் முதலில் பேசிவிடுவார்கள், பின்னர் தான் யோசிப்பார்கள்" என பதிவிட்டுள்ளார்.