தமிழகம் இந்தியா மருத்துவம் லைப் ஸ்டைல்

மாணவி அனிதாவின் பெயரில் நீட் பயிற்சிக்காக புதிய மொபைல் ஆப்! பிளஸ்-2 மாணவியின் புதிய முயற்சி

Summary:

aNEETa app created for NEET students

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் அறியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய படம்

அனிதாவின் தற்கொலையை அரசியலாக்க முயன்ற பலரும் இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் டெல்லியில் பிளஸ்டூ படித்து வரும் தமிழக மாணவி இதற்கான தீர்வை தற்பொழுது கண்டுபிடித்துள்ளார்.

விருதுநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். டெல்லியில் சமஸ்கிருத பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் இனியாள் என்ற இவரது மகள் நீட் பயிற்சிக்கான புதிய செயலியை மாணவி அனிதாவின் பெயரில் உருவாக்கியுள்ளார். கணினி மீது கொண்ட ஆர்வம் காரணமாக கணினி அறிவியல் படித்து வரும் இவர் மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்காக இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

ஏழை மாணவர்கள் எளிய முறையில் பயிற்சி பெறவும் இந்த செயலியை இலவசமாக இவர் அளித்துள்ளார். இந்த செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ ‘aNEETa’ என ‘டைப்’ செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அனைவரும் எளிமையாக பயிற்சி பெறும் வகையில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என தனித்தனி பிரிவுகளாக பிரித்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் தங்களது திறனை அறிந்து கொள்ள இதில் கொடுக்கப்பட்டுள்ள வினாத்தாள் மூலம் தேர்வினையும் எழுதி மதிப்பெண்களையும் பார்த்துக்கொள்ளலாம். இந்த செயலின் மூலம் மாணவர்கள் இணையத்தில் தங்களது தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை ஒப்பிட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

இத்தகைய சிறப்பு மிக்க செயலியை உருவாக்கிய மாணவி இனியாள் இதைப் பற்றி கூறியபோது, "12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் அனிதாவால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை; அனிதா போன்ற மாணவ, மாணவிகளுக்கு போதிய பயிற்சி வேண்டுமென்பது புரிந்தது; நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ நினைத்து aNEETa செயலியை உருவாக்கியுள்ளேன்; நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான தகவல்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன" என கூறியுள்ளார். 

 


Advertisement