எஜமானின் உயிரை காப்பாற்ற, நாகப்பாம்புடன் போராடி கொன்று உயிர்நீத்த பாசமிகு. நாய்..! வைரலாகும் வீடியோ.!
தனக்கு உணவளித்து குழந்தை போல பார்த்துக்கொண்ட எஜமானின் உயிரை காப்பாற்ற, நல்ல பாம்புடன் சண்டையிட்டு கொலை செய்த நாய், விஷம் உடலில் பாய்ந்து பரிதாபமாக பலியானது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன், சக்லேஷ்புரா சுக்ரவார் சந்தையை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டமும் உள்ளது. இந்நிலையில், மஞ்சுநாத் தனது தோட்டத்திற்கு சென்று நேற்று வழக்கம்போல வேலை செய்துகொண்டு இருந்த நிலையில், அவரின் வளர்ப்பு நாயும் தோட்டத்திற்கு சென்றுள்ளது.
தோட்டத்தில் நாய் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், நாகபாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை நாய் பார்த்துள்ளது. நாகப்பாம்பு மஞ்சுநாத்தை நோக்கி செல்லவே, நாய் எஜமானை காப்பாற்றும் பொருட்டு ஆவேசத்துடன் பாம்பை கடித்து குதறியுள்ளது. பாம்பும் - நாயும் ஆவேசத்துடன் சண்டையிட்டு கொண்டு இருந்த நிலையில், 25 நிமிடம் சண்டை நீடித்துள்ளது.
சண்டையின் முடிவில் நாகப்பாம்பை நாய் கடித்து குதறி துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ளது. ஆனால், பாம்பு உயிரிழந்த சில நிமிடத்திலேயே, நாய்க்கும் விஷம் உடலில் பாய்ந்து பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. இதனால் மஞ்சுநாத் மனமுடைந்துபோனார். பாம்பு - நாய் சண்டை தொடர்பான வீடியோவும் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.