சகோதரனை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை.! கொரோனாவை வெல்ல சிம்பு விடுத்த உருக்கமான வேண்டுகோள்.!simbu talk about corona

எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் குட்லக் சதீஷ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். இந்தநிலையில், குட்லக் சதீஷின் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சிம்பு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன்.

ரசிகர்களே.. நண்பர்களே.. சகோதர, சகோதரிகளே.. நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலைகுலையாதீர்கள். பயம் தான் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாவதை தடுக்கிறது. சாதாரண நோயை தீவிர நோய் ஆக்குவதும் பயம்தான். நிலைகுலைதல் தான் இதயத்தை தாக்குகிறது. தயவுசெய்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம் மன திட்டத்தையும் பெருக்கிக் கொள்வோம். 

தேவையான மருத்துவம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்று வெளியே செல்வதை தவிர்ப்போம். இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து புரிந்துகொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை வருத்தங்களுடன் முடிக்கிறேன்.இப்படிக்கு உங்கள் சிலம்பரசன் என குறிப்பிட்டுள்ளார்.