
நடிகர் கமலின் உடல் நிலை குறித்து அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு நடிகர் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து கால்களில் வலி ஏற்பட்ட நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கமல் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
On behalf of @ikamalhaasan here’s an update ! Thankyou for all the ❤️ pic.twitter.com/poySGakaLS
— shruti haasan (@shrutihaasan) January 19, 2021
இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கமலின் உடல் நலம் குறித்து அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக, உற்சாகமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பாவை டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்து கொள்கிறார்கள். விரைவில் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement