தல உங்களது வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்.! தல அஜித்தின் முரட்டு பக்தர்கள் அடித்த போஸ்டர்.!

உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தல என போஸ்டர் ஒட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.


ajith-fan-poster

இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்தே தல ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் வலிமை படம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளிவராததால், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொல்லை செய்துவந்தனர். மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் போது, பவுண்டரி லயனில் நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மெயின் அலியிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதேபோல் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரத்திலும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.

Ajith

இதனைப்பார்த்து வேதனையடைந்த நடிகர் அஜித் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்திருக்கும் "வலிமை" படத்தின் அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது.

முன்னரே தான் அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.

Ajith

எனவே ரசிகர்கள் இதனை மனதில் கொண்டு பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனவும், என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" எனவும் அஜித் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அஜித்தின் அறிவுறுத்தலை ஏற்கும் வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள், "உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தல" என்ற வாசகத்ததுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.