"எண்ணெய் யுத்தம் " இனி ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியே போகாது! உலக நாடுகளுக்கு ஈரான் ராணுவத்தின் கடும் எச்சரிக்கை! உலக பொருளாதாரமே அச்சத்தில்....!!!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகத்தை தடுக்கலாம் என்ற ஈரான் எச்சரிக்கை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை $200 வரை உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் நிலையில் உள்ளது. குறிப்பாக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஈரான் வெளியிட்டுள்ள எச்சரிக்கை சர்வதேச சந்தைகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் எண்ணெய் விலை நிலவரம் குறித்து புதிய அச்சங்கள் எழுந்துள்ளன.
ஈரான் ராணுவத்தின் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ராணுவத் தளபதி புதன்கிழமை முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு பாடம் புகட்டும் வகையில், உலகம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $200 வரை உயர்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்கா அல்லது இஸ்ரேலுக்கு பயனளிக்கும் ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆயில் டேங்கர்களுக்கு மிரட்டல்
மேலும் எதிரி நாடுகளுக்காக எண்ணெய் கொண்டு செல்லும் எந்த ஆயில் டேங்கர் கப்பல்களும் ஈரானின் “சட்டபூர்வ இலக்காக” கருதப்பட்டு தாக்கப்படும் என்றும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச கடல்சார் போக்குவரத்து துறையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
உலக பொருளாதாரத்திற்கு அச்சம்
ஈரானின் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை மிக வேகமாக உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் கடுமையான தாக்கம் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் உருவாகி வரும் இந்த புதிய “எண்ணெய் யுத்த” சூழ்நிலை, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.