கன்னியாகுமாரி அருகே நள்ளிரவில் கதவை தட்டிய யானை...! திகில் சம்பவம் ஏற்படுத்திய வனவிலங்கு...!
கன்னியாகுமாரி அருகே நள்ளிரவில் கதவை தட்டிய யானை...!திகில் சம்பவம் ஏற்படுத்திய வனவிலங்கு...!

கன்னியாகுமரி – கடல் அலைகளுக்கு மட்டும் அல்ல, அடர்ந்த காடுகளுக்கும் புகழ்பெற்ற மாவட்டம். இங்கு உள்ள மலையோர மற்றும் காட்டுப்பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதிர்ச்சிகரமான சம்பவம்
பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு அடகாடு பழங்குடி குடியிருப்பு பகுதியில் 65 வயதான முண்டன்காணி என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டின் பின்புறம் ஒரே சத்தமாக கதவு தட்டிய சப்தம் கேட்டது. சத்தத்தால் கண்விழித்த தம்பதியினர், கதவை தட்டியது யார்? என உறைக்க எட்டிப் பார்த்ததிலேயே ஒரு பெரிய காட்டு யானை கதவை முட்டிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது.
அச்சத்தில் மூச்சுத் திணறிய தம்பதியினர், கதவை திறந்து வீட்டின் முன்னே ஓடினார்கள். ஆனால் முண்டன்காணி, வீடு மற்றும் மனைவியை பாதுகாக்க யானையை துரத்த முயன்றுள்ளார். இதனால் ஆவேசமான யானை முண்டன்காணியைத் துரத்த துவங்கியது.
அதிர்ஷ்டவசமாக, இருவரும் ஒரு மறைவான இடத்தில் மின்னல் வேகத்தில் ஓடி தப்பிக்க முடிந்தது. யானை பின்னர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டது. ஆனால் அந்த வனவிலங்கு, வீட்டின் பின்புற கதவை முற்றிலும் சேதப்படுத்தி விட்டது.
இந்த சம்பவம் பேச்சிப்பாறை பழங்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் அடிக்கடி இப்படி விலங்குகளால் அச்சுறுத்தப்படுகிறோம், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை” என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.