வீட்டுக்குள்ள வருபவர்களுக்கு தனிப்பட்ட அறைகள் தெரியவே கூடாது! துபாய் மக்களின் U வடிவ வீட்டின் வியக்கும் வைக்கும் பின்னணி...!!!
துபாய் மற்றும் அரபு நாடுகளில் விருந்தோம்பலின் அடையாளமாக விளங்கும் மஜ்லிஸ் கலாச்சாரம் இன்று வரை எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு சிறப்பு பார்வை.
துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் விருந்தினர்களை வரவேற்கும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக மஜ்லிஸ் பார்க்கப்படுகிறது. வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே அமைக்கப்படும் இந்த வரவேற்பறை, சாதாரண அறையாக இல்லாமல் சமூக மரியாதை மற்றும் குடும்ப கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. இன்றும் பணக்காரர்கள் முதல் நடுத்தர குடும்பங்கள் வரை இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
விருந்தோம்பலுக்கென தனி அமைப்பு
அரபி மொழியில் ‘அமரும் இடம்’ என்று பொருள் தரும் மஜ்லிஸ், பெரும்பாலும் வீட்டின் முக்கிய பகுதியிலேயே அமைக்கப்படுகிறது. சில பெரிய வீடுகளில் இதற்கென தனி நுழைவாயிலும் இருக்கும். வெளியில் இருந்து வரும் விருந்தினர்கள் வீட்டின் தனிப்பட்ட பகுதிகளைப் பார்க்காமல் இருக்கவும், குடும்ப பெண்களின் தனியுரிமை பாதுகாக்கப்படவும் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிக ஆடம்பரமான உள்துறை அலங்காரங்களுடன் அமைக்கப்படும் இந்த அறையில், சோபாக்கள் அல்லது மெத்தைகள் சுவரை ஒட்டி ‘U’ வடிவில் வைக்கப்பட்டிருக்கும். இதனால் அங்கு அமர்பவர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி உரையாட முடிகிறது. குடும்ப ஆலோசனைகள், தொழில் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமூக சந்திப்புகளுக்கும் இது முக்கிய இடமாக செயல்படுகிறது.
இதையும் படிங்க: இபிஎஸ் தலையில் விழுந்த இடி! செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளி!
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி மஜ்லிஸ்
அரபு நாடுகளில் பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக அமருவது வழக்கமாக இருப்பதால், பெரும்பாலான வீடுகளில் இரண்டு மஜ்லிஸ்கள் அமைக்கப்படுகின்றன. ஆண்கள் மஜ்லிஸில் குடும்பத்தின் ஆண்கள், நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புடையவர்களை சந்தித்து பேசுவார்கள்.
அதே நேரத்தில் பெண்களுக்கான மஜ்லிஸில், பெண்கள் தங்களது தோழிகள் மற்றும் உறவினர்களுடன் சுதந்திரமாக நேரம் செலவிடுகின்றனர். குடும்ப விழாக்கள், சிறிய கொண்டாட்டங்கள் மற்றும் சமூக சந்திப்புகளும் அங்கு நடைபெறுவது வழக்கம்.
இன்றும் தொடரும் பாரம்பரியம்
காலம் மாறினாலும் அரபு கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலின் அடையாளமாக மஜ்லிஸ் இன்னும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பல அரபு குடும்பங்களில் இது மரியாதை, செல்வாக்கு மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது.