2 பேரின் உயிரை காப்பாத்துனவருக்கு இந்த நிலைமையா? படுத்த படுக்கையாக கிடக்கும் வாலிபர்! சாப்பாட்டுக்கே வழியில்லாமல் குடும்பம் படும் அவஸ்தை.... அரசுக்கு உருக்கமான கோரிக்கை.!!!
டெல்லி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிய ரோஹித், கடுமையாக காயமடைந்து தற்போது வாழ்வாதாரமின்றி குடும்பத்துடன் சிரமத்தில் உள்ளார்.
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் இரு சக ஊழியர்களைக் காப்பாற்றிய 32 வயது இளைஞர் ரோஹித், தற்போது படுக்கையிலேயே முடங்கிய நிலையில் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார். உயிர்களை காப்பாற்றியவராக பாராட்டப்பட்ட அவர், இன்று குடும்பத்தின் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீக்குள் பாய்ந்து காப்பாற்றிய துணிச்சல்
பீகாரைச் சேர்ந்த ரோஹித், தனது குடும்பத்துடன் டெல்லியின் ஹௌஸ் ரானி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் பணியாற்றிய விடுதியின் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கட்டுப்படுத்த முயன்றபோது, முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் இரு ஊழியர்கள் சிக்கியிருப்பது ரோஹித்திற்கு தெரியவந்தது. இதையடுத்து அடர்ந்த புகை மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் மேலே சென்ற அவர், குளியலறையின் கண்ணாடியை உடைத்து ராஜ் மற்றும் குந்தன் ஆகிய இருவரையும் பாதுகாப்பாக கீழே குதிக்கச் செய்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.
காப்பாற்றியவருக்கே நேர்ந்த விபத்து
இருவரும் தப்பிய பிறகு, ரோஹித் கடைசியாக கீழே குதிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது. அவரது காலில் கண்ணாடி குத்தியதோடு, முதல் தளத்தில் இருந்து விழுந்ததில் இடுப்பு எலும்பு கடுமையாக சேதமடைந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இடுப்பில் இரண்டு இரும்புத் தண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
வாழ்வாதாரத்திற்காக காத்திருக்கும் குடும்பம்
நடக்க முடியாத நிலை காரணமாக ரோஹித்தால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் தனது வேலையை நிறுத்தியுள்ளார். இதனால் குடும்பத்தின் வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை, குழந்தைகளின் உணவு மற்றும் அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் குடும்பம் கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிறரின் உயிரைக் காப்பாற்றிய தங்களுக்கு தற்போது உதவி தேவைப்படுவதாகக் கூறும் ரோஹித், அரசு மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவளிக்க வேண்டும் என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.